உள்ளமெல்லாம் பொங்குமே "வெண்பொங்கல்"
உள்ளமெல்லாம் பொங்குமே "வெண்பொங்கல்" என்ற ஒரு வார்த்தை கேட்டால் !!
இது
ஒரு நாக்கின் சரித்திரப் பதிவு. இந்த பதிவின் அருமையை நூடுல்ஸ், பீட்சா,
பாஸ்தா என்ற அந்நிய அனாச்சார குழகுழா உணவுகளுக்கு அடிமை பட்ட நாக்குகளால்
உணரவே முடியாது. அவர்கள் விலகி நின்று வேடிக்கை பார்க்கவும்.
"வெண்
பொங்கல்" எனது நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்த்து எழுந்து ஒரு இனிய சுவை
அனுபவத்திற்கு என்னை தயார் ஆக்கும் ஒரு வார்த்தை. அரிசி, பயத்தம்பருப்பு,
பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி, ஜீரகம், நெய் இது இருந்தால் யார்
வேண்டுமானாலும் பொங்கல் செய்து விடலாம் என்ற நினைப்பு உங்களுக்கு
இருந்தால் கையை கட்டிக்கொண்டு ஒரு ஓரமாக நில்லுங்கள். அது பிறவியிலேயே
கைமணம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.
ருசியான
பொங்கல் செய்வது என்பது தனிமையான இரவின் குளிரில் இளையராஜா பாடலை கண்ணை
மூடி கேட்கும் ஒரு சுகானுபவம். அதை மூளை முழுவதும் பொங்கல் ருசியால்
நிரம்பி முழுக்கப் பண்பட்டவர்களால் மட்டுமே செய்ய முடியும். ஒரு அருமையான
பொங்கலுக்கான அடையாளம் அதனை கரண்டியால் வழித்து போடும்போது கரண்டியில்
ஒட்டாமல் தட்டில் விழும்போது உருண்டையாக விழ வேண்டும்.
வெண்பொங்கல்
சுகானுபவத்தை விவரிக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் இப்போதும் எனது பொங்கல்
ஆசைக்கு தூபமிட்டு, யூடூப்பில் பார்த்து விதவிதமான கொத்சு ரகங்களை செய்து,
கூடவே அதிகம் பொட்டுக் கடலை போடாமல், புதிதாக தேங்காய் உடைத்து துருவி,
குறைவான பச்சைமிளகாய் காரத்துடன் தேங்காய் எண்ணையில் தாளித்த சட்னியை
கூடுதலாக சேர்த்து என்னை மனம் குளிர வைக்கும் எனது அன்பு மனைவி சரோஜாவே
இந்த பதிவிற்கு ஆதார சுருதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள்
வாழ்க்கையில் இதுவரை பெருமாள் கோவில் பொங்கலை சாப்பிடாமல் இருந்திருந்தால்
அந்த வாழ்நாட்கள் வீண்தான். நாங்கள் மயிலாப்பூரில் கேசவ பெருமாள் கோவில்
கிழக்கு வீதியில் இருந்தபோது எனக்கு அருகில் இருந்த தேசிகர் மற்றும் கேசவ
பெருமாள் கோவிலின் பொங்கல் தரும் நேரங்கள் மனப்பாடமாக தெரியும். மார்கழி
மாத காலைகளில் வடகலை தேசிகர் கோவிலில் நெய், முந்திரி மணக்கும் பொங்கலை
மந்தார இலையில் சூடாக வாங்கிக்கொண்டு உடனே கேசவ பெருமாள் கோவில் பொங்கல்
விநியோகத்துக்கு ஓடும்போது என்னுள்ளே அப்போதே ஒரு உசைன் போல்ட் இருந்தான்.
மாயவரம்
காளியக்காவிளை ஹோட்டல் (இப்போது கை மாறிவிட்டது), வைத்தீஸ்வரன் கோவில்
தையல் நாயகி மெஸ் (இப்போது மூடி விட்டார்கள்), கும்பகோணம் வெங்கிடா லாட்ஜ்
என்பவை எல்லாம் ஒரு காலத்தில் என்னுடைய பொங்கல் வேண்டுதல் தலங்கள்.
எனக்கென்னவோ பெங்களூரின் கஞ்சிப் பொங்கலை கடைசீவரை பிடிக்காமலே போனது.
நான்
மயிலாப்பூரில் கேசவ பெருமாள் கோவில் கிழக்கு வீதியில் இருந்தபோது
சித்திரைக்குளம் அருகே ஆதிகேசவ விலாஸ் ஹோட்டல் இருந்தது . அங்கே நெய்
மணத்துடன் முந்திரி பருப்பு ஆங்காங்கே தென்படும் பொங்கலின் மேலே நல்ல
எண்ணை வாசனையுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் கத்தரிக்காய் சேர்த்து
செய்த கொத்சு விடுவார்கள். அதை மெதுவாக கையினால் பொங்கலுடன் நன்கு கலந்து
விரல் நுனிகளால் எடுத்து நாவில் வைக்கும்போது ம்ம்ம்ம். அதை
அனுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும்.
நான்
OCSல் (பிறகு VSNL ஆகி இப்போது TATA Communication) வேலை பார்த்தபோது
முதலில் ஆபீஸ் இப்போது பர்மா பஜார் இருக்கும் GPO பில்டிங்கில் ஒரு
பகுதியில் இருந்தது. வெள்ளிக்கிழமை இரவு Night shift முடிந்தவுடன் நானும்
எனது நண்பன் சிவதாஸும் அப்போது தம்பு செட்டி தெருவில் இருந்த குடுமி ஐயர்
ஓட்டலுக்கு சனிக்கிழமை அதிகாலையிலேயே ஆஜராகிவிடுவோம். எங்களை பார்த்தவுடன்
சூடான தளதளக்கும் பொங்கலுடன் ஒரு பொன்னிற வடை வைத்து தட்டை கொண்டுவருவார்.
பொங்கலில் நடுவே கரண்டியால் குழி செய்து ஒரு கரண்டி நெய் விடுவார். கூடவே
வெள்ளை வெளேர் என்று கெட்டி தேங்காய் சட்டினி, வெங்காய கார சட்டினி,
பெருங்காய வாசனையுடன் சாம்பார். இலையை ஓட்ட நக்கிவிட்டு ஒரு காப்பி வாங்கி
ஆளுக்கு பாதி-பாதி சாப்பிடுவோம். அங்கிருந்து நேரே மெரினா நீச்சல்
குளத்திற்கு சென்று 9.00 மணிவரை நீரில் துளைந்துவிட்டு எழுந்தால் பொங்கல்
ஜீரணமாகி இருக்கும்.
நான்
திருவல்லிக்கேணியில் இருந்த 17 plus வருடங்கள் எனது வாழ்வில் ''பொங்கலான''
வருடங்கள் ஆகும். அநேகமாக எல்லா நாட்களிலும் யாரேனும் பார்த்தசாரதி
பெருமாள் கோவில் பொங்கலை தந்து எனக்கும் பொங்கலுக்கும் இடையே உள்ள
பந்தத்தை நீர்த்து விடாமல் பார்த்துக் கொண்டனர். பக்கத்து வீட்டில் இருந்த
ரவி, ராஜி தம்பதிகளுக்கு அதில் பெரும்பங்கு உண்டு. அதே போல பிரதோஷ
நாட்களில் சாயங்காலம் அகோபில மடத்து பொங்கலை சாப்பிட பயபக்தியுடன் ஆஜராகி
விடுவேன்.
என்னைப்
போலவே பெருமாள் கோவில் பொங்கலின் பரம பக்தர் ஆன எனது மச்சினன்
வெங்கட்ராமன் அந்த பொங்கலை சாப்பிட ஒரு நல்ல நாளில் பார்த்தசாரதி கோவிலில்
ஒரு அரை தளிகை விட்டார். அன்று வேறு யாரும் கூடவே தளிகை விடாததால் ஒரு
பெரிய எவர்சில்வர் டப்பா நிறைய நெய்யும் முந்திரியும் மிதக்கும் அந்த தளதள
பொங்கல் கிடைத்தது. தயாராக என் மனைவி வீட்டிலேயே செய்திருந்த ஸ்பெஷல்
கத்தரிக்காய் கொத்ஸுவும், தேங்காய் சட்டினியும் சூப்பர் காம்பினேஷன்.
சாப்பிட்டுவிட்டு இரை முழுங்கிய மலைப்பாம்பு மாதிரி ஒரு மப்புடன் நாள்
முழுவதும் இருந்தோம்.
பொங்கலை
சாப்பிடுவது என்பதே ஒரு தனி கலை. கொதிக்க கொதிக்க பொங்கலை விரலும்,
நாக்கும் சுட சாப்பிடுபவர்கள் அதன் சுவையை அறியவே முடியாது. அதே போல
ஆறிப்போன பொங்கல் கிட்டவே வராகி கூடாது. பொங்கல் மிதமான சூட்டிற்கு சிறிது
மேலான சூட்டில் இருக்க வேண்டும். என்னை பொருத்தவரை பொங்கலை கைகளால்
சாப்பிடுவதுதான் நல்ல முறை. பொங்கலின் நடுவே சிறு குழியில் சாம்பாரை
ஊற்றிக் கொள்ளவேண்டும். சட்டினி தனியாக இருக்க வேண்டும். விரல் நுனியால்
பொங்கலை சாம்பாருடன் சிறிது குழைத்து எடுத்து அதை அப்படியே சட்டினியில்
லேசாக முழுக்காட்டி வாயில் சிறிது நேரம் வைத்திருந்து முழுங்கவேண்டும்.
அந்த நெய்யில் வறுத்த மிளகுகளை தூக்கி எறியாமல் பொங்கலோட சேர்த்து
கடிக்கும்போது சுள் என்று ஏற்படும் உறைப்பு அனுபவம் சொல்லித் தெரியாது.
அனுபவித்தால்தான் தெரியும்
.
கடைசீயாக
ஒரு வார்த்தை பொங்கலை சாப்பிட்டு முடித்தவுடன் இரண்டு பங்கு பீபரி ஒரு
பங்கு ஏ காம்பினேஷனில் அரைத்த சிக்கிரி கலக்காத காப்பி பொடியில் போட்ட
டிகாக்க்ஷனில் நல்ல திக்கான கொதிக்கும் பசும்பால் விட்டு அரை சக்கரை போட்டு
கலந்த காப்பியை குடிக்க வேண்டும்.
அந்த அனுபவத்தை பெற்றவர்கள் வாழ்நாள் பேறு பெற்றவர்கள். .
Comments
Post a Comment